90 ஆண்டுகளில் முதல் முறையாக மொத்தமாக ஸ்தம்பித்த வல்லரசு..!"பைடனின் அதிபர் பதவிக்கே வேட்டு"
அமெரிக்காவின் மூன்று பெரும் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒரே சமயத்தில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோர்ட்(ford)மற்றும் ஸ்டெல்லான்டிஸ் ஆகிய மும்மூர்த்தி நிறுவனங்கள்,
கடந்த 90 வருடங்களாக அமெரிக்காவின் மிகப்
பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களாக கோலோச்சி வருகின்றன.
இதில், ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் முன்பு கிரிஸ்லராக இருந்து, பின்னர் fiat மற்றும் பி.எஸ்.ஏ ஆகிய ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டு, புதிய பெயரில் இயங்கி வருகிறது.
கடந்த 90 வருடங்களில் இல்லாத வகையில், முதல் முறையாக இந்த மூன்று நிறுவன தொழிலாளர்கள் இணைந்து வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர்.
மிக்சிகன், மிஸ்ஸோரி, ஒஹையோ மாகாணங்களில் அமைந்துள்ள மூன்று தொழிற்சாலைகளைச் சேர்ந்த 12,700 தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் வேலை நிறுதத்தை தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த இவர்கள்,
மூன்று தொழிற்சாலைகளின் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 36 சதவீத சம்பள உயர்வு கோரி போராடி வருகின்றனர்.
ஆனால் முப்பெரும் நிறுவனங்கள் 17 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தி தர முன் வந்துள்ளதால், பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. ஃபோர்ட் ப்ரோன்கோ, ஜீப் ரேங்கலர், செவர்லட் கொலராடோ உள்ளிட்ட பல்வேறு பிரபல கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் கோரும் சம்பள உயர்வை அளித்தாலும், இந்த மூன்று கார்ப்பரேட்களின் லாபம் பெரிய அளவுக்கு குறையாது என்று தொழிற்சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் கூடுதல் செலவு ஆகும் என்பதால், இது சாத்தியமில்லை என்று கார்ப்பரேட் நிர்வாகிகள் மறுக்கின்றனர்.
2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள ஜோ பைடன், தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளார்.
ஆனால் வேலை நிறுத்தம் தொடர்ந்தால், அது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி, ஜோ பைடனின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.