ஆப்கானில் இருந்து படைகள் வெளியேற்றம் : "நான் செய்ததே சரியானது" - ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விவகாரத்தில், தனது முடிவு மிகச் சிறந்தது என அமெரிக்க அதிபர் பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஆப்கானில் இருந்து அமெரிக்க படை வெளியேற்றியபட்ட முடிவுக்கு தாம் முழுவதுமாக பொறுப்பேற்பதாக பைடன் தெரிவித்துள்ளார். தாம் எடுத்த முடிவு முற்றிலும் சரியான சிறந்த முடிவு என்றும் அவர் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். முன்கூட்டியே ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றியிருந்தால் கடைசி வரை தலிபான்களுடன் போரிட்ட ஆப்கான் அரசின் நம்பிக்கை அப்போது சிதைத்து போயிருக்கும் என பைடன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப்படைகளை வெளியேற்றியது தனிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என பைடன் கூறியுள்ளார். முந்தைய டிரம்ப் ஆட்சியில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியின் படியும், ஆப்கானை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும் என்றும் நிலைப்பாட்டின் படி நடவடிக்கை எடுத்ததாவும் அவர் தெரிவித்தார். இன்னும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களை போரிட ஆப்கானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நிலையில், சரியான முடிவு எடுக்கப்பட்டதாவும் பைடன் கூறினார்.ஆப்கானுடனான போரை நீட்டிக்க விரும்பவில்லை எனவும்,
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த இனி ஒருபோதும் ஆப்கானிஸ்தானை பயன்படுத்த முடியாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகளை அனுப்பி வைப்பதன் மூலமாக தான் அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக போராட மற்ற நாடுகளும் முன்வர வேண்டும் என்றும் பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story