பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடையில் இனி என்ன நடக்கும்?
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக் கைகளுக்கு எதிராக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் 1967-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உபா என அழைக்கப்படும் இந்த சட்டம், சட்டவிரோத செயல் களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க அனுமதிக்கிறது.
இந்த சட்டத்தின் கீழ் 42 அமைப்புகள் பயங்கரவாத இயக்கங்களாகும், 13 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாகவும், 31 தனிநபர்கள் பயங்கரவாதிகள் எனவும் பட்டியலிட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி வரையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இப்போது பி.எஃப்.ஐ அமைப்பை மத்திய அரசு சட்டவிரோத அமைப்பாக தடை செய்துள்ள நிலையில், அந்த அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யலாம்; அமைப்பின் அலுவலகத் தை முற்றிலும் மூடலாம்; பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் வங்கி கணக்குகளை முடக்கலாம், சொத்துக் களையும் முடக்கலாம். தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக தொடர்பவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கலாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலில், 2018 முதல் 2020 வரையில் 3 ஆண்டுகளில் உபா சட்டத்தில் 4 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டனர்; அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் ஆயிரத்து 338 பேர் பிடிபட்டனர். 149 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது.
இப்போதைக்கு பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை என்ற அறிவிப்பு தற்காலிக தடையே... இதனை உபா தீர்ப்பாயமே உறுதிசெய்யும்.
உபா சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கும். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு 30 நாட்களில் மத்திய அரசு நோட்டீஸ் வழங்கும். பி.எஃப்.ஐ அமைப்பின் செயல்பாடு எப்படி தேச பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ளது என்பது குறித்த தகவல்களை தீர்ப்பாயத்தில் மத்திய அரசு அறிக்கையாக தாக்கல் செய்யும்.
இது கிடைத்ததும் ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கோரி பி.எஃப்.ஐ அமைப்பிற்கு தீர்ப்பாயம் நோட்டீஸ் விடுக்கும். இதுதொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்டு விசாரணையை மேற்கொள்ளும் தீர்ப்பாயம் தீர்ப்பை வழங்கும். தடை செய்வதற்கான முகாந்திரம் இல்லையெனில் தடையை தீர்ப்பாயம் நீக்கலாம்.
இந்த ஒட்டுமொத்த சட்ட நடவடிக்கையும் 6 மாதங்களில் நிறைவடைய வேண்டும். சமீபத்தில் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்ததை கடந்த ஆகஸ்ட் மாதம் உபா தீர்ப்பாயம் உறுதிசெய்தது.