ரூ.1.60 லட்சம் கோடி கடன்-மூன்றாக பிரிக்கப்படும் மின்சார வாரியம்? புதிய பிளான் -தலைகீழாக மாறும் நிலை

x

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான Tangedoவை மூன்று நிறுவனங்களாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

தமிழகத்தில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோக செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம், 2008ல் இரண்டாக பிரிக்கப்பட்டது.

Tangedco எனப்படும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் Tantransco என்பப்படும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என இரண்டு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில் பல்வேறு சிக்கல்களால் Tangedcoவின் கடன் சுமை 1.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. Tangedcoவின் நிதி நிலைமையை மேம்படுத்த Ernst and Young என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம் 2021ல் பணியமர்த்தப்பட்டது.

Tangedoவின் செயல்பாடுகளையும், நிதி நிலைமையையும் முழுவதும் ஆராய்ந்த Ernst and Young, நிலைமையை சீர் செய்ய பல்வேறு பரிந்தரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த மாதம் சமர்பித்தது.

Tangedcoவை மூன்று நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றும், மின் விநியோக பணிகளுக்கான தனி நிறுவனமும், புதுபிக்கத் தக்க ஆற்றல் பணிகளுக்காக தனி நிறுவனமும் உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில், சூரிய சக்தி, காற்றாலைகள், பையோ கேஸ் மூலமான மின் உற்பத்திகளை ஊக்கப்படுத்தும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மூன்றாவது நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் கடன் சுமை மூன்றாக பிரிக்கப்பட்டு, ஒரு தனி நிறுவனத்தின் கடன் சுமை குறைந்த அளவில் இருக்க வகை செய்யப்படுகிறது.

தற்போது கடன் சுமை மிக அதிகமாக, 1.6 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 11 சதவீதம் வட்டி விதிப்பதாக Tangedco அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடன் சுமை மூன்றாக பிரிக்கப்பட்டால், வட்டி விகிதம் 9.௫ சதவீதமாக குறையும் என்கின்றனர். குறைந்த வட்டியில் புதிய கடன்களை வாங்க முடியும்.

Tangedco மூன்றாக பிரிக்கப்பட்டால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தலைவர்கள் நியமிக்கப்பட்டு, அவற்றின் செயல் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் Tangedcoவை மூன்றாக பிரிக்க, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்