வள்ளி தெய்வானையுடன் 11 முறை வலம் வந்த சுப்பிரமணிய சுவாமி

x

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நேற்று வைகாசி மாத திருவிழாக்கள் நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி வசந்த விழாவை ஒட்டி, சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர், வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்தின் முன்பு எழுந்தருள, ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் மாயூரநாதரை தரிசித்தனர். ஈரோடு மாவட்டம் ஈங்கூர் பகுதியில் உள்ள தம்பிராட்டி அம்மன் கோயிலில், கும்பாபிஷேக விழா வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி ஆயிரத்து எட்டு பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது நடன குதிரைகள், காங்கேயம் காளைகள், பசுமாடுகள், யானை ஆகியவையும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது.

வேலூர் மாவட்டம் கோபாலபுரத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மனின் சிரசு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு, அம்மனின் உடலில் பொருத்தப்பட்டது. பின்னர், ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட பிரம்மாண்ட மலர் மாலை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இரவில் அம்மனின் உடலில் இருந்து சிரசு எடுக்கப்பட்டு, சலவை துறையில் வைக்கப்பட்டது. மேலும், திருவிழாவின் முக்கிய அம்சமான வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்