பிடிக்க வந்த போலீசை பேப்பரை காட்டி பதறவைத்த இளைஞர்.. "கோழிக்கறிக்கு கேஸா?".. பரபரப்பு காட்சி
தென்காசி பாவூர்சத்திரம் அருகே கைது செய்ய முற்பட்ட போது, இளைஞர் கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.
ஆவுடையானூரைச் சேர்ந்த இயேசுராஜாவை வன அலுவலர்கள் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் இணைந்து வீடு புகுந்து கைது செய்ய முற்பட்டனர்.
அப்போது தன் மீது பொய் வழக்கு போட நினைப்பதாகவும், தான் தவறு ஏதும் செய்யவில்லை எனவும் கூறி இளைஞர், கதவை பூட்டிக்கொண்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரையில் இந்த வாக்குவாதம் நீடித்தது.
தவறு ஏதும் செய்யாதபோதும் இயேசுராஜா மீதும் அவர் நண்பர் மணிகண்டன் மீதும் 2 மாதங்களுக்கு முன்பு வனவிலங்கை வேட்டையாடியதாக பொய்யான வழக்கு போட முயன்றதாகவும்,
ஆட்சியரிடம் மனு அளித்து, வன அலுவலர்கள் சார்பில் இருவர் மீதும் எவ்வித வழக்குகளும் இல்லை என தெளிவான அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பின்பும் சிலரின் தூண்டுதலால்
தற்போது கைது செய்ய நினைப்பதாகவும், 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் சமைப்பதற்காக கோழியை உரித்துக் கையில் வைத்து போட்டோ எடுத்ததை மயிலை வேட்டையாடி கையில் வைத்திருப்பதாகக் கூறி கைது செய்ய முயல்வதாக இளைஞர் இயேசுராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு
பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இளைஞர் வன அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்...
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.