தீப்பெட்டி நிறுவனங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்
தீப்பெட்டி உற்பத்தியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட அவர், தீப்பெட்டிகள் தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் ஆண்டாள் கோவிலின் கிளி வழங்கப்பட்டது. பின்னர், தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, இந்தியவில், சீன லைட்டர்களுக்கு வரியை உயர்த்தியதன் மூலம் தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தி புத்துணர்ச்சி பெற்று வருகிறது என்று கூறினார். தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தீப்பெட்டித் தொழிலில் 80 சதவீதம் பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும், பெண்களின் வளர்ச்சியில்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். அதைத் தொடர்ந்து, சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.