அரைகுறை வேலைக்கு ரூ.1.11 கோடிகிளறி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறைசிக்கிய ஓய்வு பெற்ற அதிகாரிகள்
வேலூர் மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு முதல், 2021ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் நடைபாதை அமைப்பதில், ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் முதல் அடுக்கம்பாறை வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, நடைபாதை மற்றும் தடுப்பு வேலி அமைக்க 35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2019-2021ம் ஆண்டு வரை, அ.தி.மு.க ஆட்சியில் இந்தப் பணிகள் நடந்தன. அப்போது, கோட்ட பொறியாளராக இருந்த பழனிசாமி, உதவி கோட்ட பொறியாளர் தியாகு, உதவி பொறியாளர் வேதவள்ளி ஆகியோர் சரிவர ஆய்வு செய்யாமல், முடிக்காத பணிக்கு, ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புதுறையினர் விசாரணை நடத்தியதில், ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், சென்னை, விருதுநகர், திருவண்ணாமலை, மதுரையில் சோதனை நடத்தியதில், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த விவகாரத்தில், தற்போது பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.