அரசு அதிகாரியை மயக்கிய காகித பேய்..ஆர்வமே விபரீதமாக மாறிய பரிதாபம்
அரசு அதிகாரியை மயக்கிய காகித பேய்..ஆர்வமே விபரீதமாக மாறிய பரிதாபம் - இந்த மாதிரி வீடியோவை பார்த்தால் உஷார்
புதுச்சேரியில் வேளாண் துறை ஊழியரிடமிருந்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது...
விள்ளியனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அரசு வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். பழமையான நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட சக்திவேல், முகநூலில் பழைய நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குவது குறித்த விளம்பரத்தைக் கண்டு, அந்நபர்களை தொடர்பு கொண்டுள்ளார். இதில், சக்திவேல் தன்னிடமிருந்த சில நாணயங்களை அவர்களுக்கு அனுப்பிய நிலையில், குறிப்பிட்ட நாணயங்கள் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், ஒவ்வொரு நாணயத்திற்கும் 5 லட்ச ரூபாய் வீதம் பணம் வழங்கப்படும் எனவும் அக்கும்பல் தெரிவித்துள்ளனர். மேலும், சக்திவேலை நம்ப வைப்பதற்காக, கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எண்ணும் வீடியோ ஒன்றையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, சுமார் 3 மணி நேரத்தில் நேரில் வந்து பணத்தை கொடுப்பதாக சம்பந்தப்பட்ட கும்பல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 2 மணி நேரம் கழித்து சக்திவேலை தொடர்பு கொண்ட அந்நபர்கள், உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் தங்களை பிடித்துள்ளதாகவும், வாகனத்தில் பணம் இருப்பது கண்டறியப்பட்டால் மொத்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விடுவார்கள் எனக் கூறி, போலீசாருக்கு கொடுக்க 45 ஆயிரம் ரூபாயை அனுப்புமாறு சக்திவேலிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனை நம்பிய சக்திவேல், அவர்களுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். பணம் பெற்ற சற்று நேரத்தில் அக்கும்பல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சக்திவேல், சம்பவம் குறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.