22 வருசமா நாடே தேடிய குற்றவாளி.. தமிழ் பெண்ணுக்கு தாலி கட்டி நெல்லையில் பதுங்கி மர்ம வாழ்வு

x

22 வருசமா நாடே தேடிய குற்றவாளி.. தமிழ் பெண்ணுக்கு தாலி கட்டி நெல்லையில் பதுங்கி மர்ம வாழ்வு

கடந்த 22 வருடங்களாக... சிபிஐ அதிகாரிகளை, நாடு முழுவதும் அலைய வைத்து சுத்தலில் விட்ட மோசடி பேர்வழி சிக்கிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கலகலப்பு திரைப்பட அமிதாப் மாமா போல், பல வேடங்கள் அணிந்து சுமார் 22 வருடங்களாக சிபிஐக்கு போக்கு காட்டி வந்தவர்தான் இந்த சலபதி ராவ்...

உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு என... சிக்காத சில் வண்டாக சிபிஐ அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவி ஆட்டம் காண்பித்து வந்திருக்கிறார் இந்த சலபதி ராவ்...

அதுவும் சாதாரணமாக அல்ல... தான் பதுங்கிய இடங்கெளிலெல்லாம் தன் பெயரை மாற்றியதோடு, அந்த பெயரில் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று வாழ்ந்து வந்தது தெரியவர அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கின்றனர்..

தனது மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து தலைமறைவான சலபதி ராவ், தமிழகத்தின் சேலத்தில் பதுங்கியிருந்த நிலையில், பெண் ஒருவரை இரண்டாம் தாரமாக மணமுடித்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்..

கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார் இந்த சலபதி ராவ்..

அப்போது, எலக்ட்ரானிக் நிறுவனங்களின் பெயரில்.. தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரை பயன்படுத்தி போலியான சம்பள பட்டியல் தயார் செய்த இவர், சுமார் 50 லட்ச ரூபாய் வரை பண மோசடி செய்திருக்கிறார்..

இது தொடர்பாக கடந்த 2002 ஆம் ஆண்டே சிபிஐ வழக்குபதிவு செய்த நிலையில், கடந்த 2004 இல் இரு குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்தது...

இதனிடையே, கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து சலபதி ராவை காணவில்லை எனக்கூறிய அவரது மனைவி, தனது கணவர் மாயமாகி 7 ஆண்டுகள் ஆனதால் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

ஆனால், இதை பொருட்டாகவே சிபிஐ கருதவில்லை...

கடந்த 2013 இல் சலபதிராவை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தது..

தொடர்ந்து, சலபதிராவின் சொத்துக்களை கைப்பற்ற சிபிஐ முயற்சி செய்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சலபதிராவின் மனைவி சிபிஐக்கு எதிராக தடையாணை பெற்று குடைச்சல் கொடுத்தார்..

இந்த சூழலில்தான், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு என பல மாநிலங்களில் பதுங்கி இருந்து கடந்த 22 ஆண்டுகளாக போக்கு காட்டி வந்திருக்கிறார் சலபதி ராவ்..

இதில், தமிழகத்தில் வினித்குமார் என்ற பெயரில் பதுங்கி இருந்த சலபதி ராவ், சேலத்தை சேர்ந்த பெண் ஒருவரை மணமுடித்து ஆதார் கார்டு போன்ற அடையாள ஆவணங்களை பெற்று வாழ்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது..

இதனிடையே, மத்தியபிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் விதித் மானந்தா தீர்த்தா என்ற பெயரில் சாமியராக வேடம் தரித்து தங்கிய சலபதி ராவ், இந்த பெயரிலும் ஒரு ஆதார் கார்டு பெற்றதோடு ஆசிரமத்தில் இருந்து 70 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்..

எந்தவொரு க்ரைமிலும் குற்றவாளி ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வது வழக்கம் என்ற நிலையில், இதற்கு சலபதிராவும் விதிவிலக்கல்ல..

தான் தலைமறைவாக இருந்த போதிலும், தன் முதல் மனைவியின் மூத்த மகனுடன் சலபதி ராவ் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பில் இருந்திருக்கிறார்..

அதோடு, செல்லும் மாநிலங்களில் எல்லாம் புதுப்புதுப்பெயரில் ஆதார்டு கார்டு பெற்றாலும், மண்டை மீது இருந்த கொண்டையை மறந்த கதையாய் தனது இ மெயில் ஐடி விவரங்களை மாற்ற சலபதிராவ் தவறியிருக்கிறார்..

இந்த பொறியை வைத்துதான் சலபதிராவை சுமார் 22 ஆண்டுகளாக விடாது சிபிஐ துரத்தி வந்த நிலையில் , நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூரில் உள்ள அவரின் நண்பரின் வீட்டில் வைத்து கைது செய்திருக்கின்றனர்.

தொடர்ந்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்