முதல்வருக்கு எதிரான வழக்கு - நாளை மறுதினம் தீர்ப்பு
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடக் கூடும் என்ற காரணத்தால் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்பட்டதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி, சட்டமன்றம் கலைந்ததும் உரிமை மீறல் நடவடிக்கைகள் காலாவதியாகி விடும் எனவும் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார். குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதாக்கள் காலாவதியானாலும், உரிமை மீறல் நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என கேள்வி எழுப்பி தீர்ப்பை நாளை மறுநாளைக்கு தள்ளிவைத்தனர்.