அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைவதையொட்டி, எம்.பி - எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இன்று அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. பின்னர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறையின் வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டது. இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளதால், அவர், எம்.பி - எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.