போலீஸ் தேடிய நபர் விபரீத முடிவு.. கொந்தளித்த உறவினர்கள்
கஞ்சா விற்பனை செய்ததாக கூறி போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட தேடப்பட்டு வந்த இளைஞர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கொட்டூர் கிராமத்தில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, இளைஞர் சிலர் மறைந்திருந்து கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இருவரை பிடித்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் மூலம் கஞ்சா விற்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், சந்தேகத்தின் அடிப்படையில் உதயகுமாரை போலீசார் தேடி வந்திருக்கின்றனர். இந்நிலையில், 2 நாட்களாக தலைமறைவாக இருந்த உதயகுமார், திடீரென கிராமத்தின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இளைஞரின் மரணத்திற்கு போலீசார்தான் காரணம் எனக்கூறி அவரின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இளைஞரின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.