கன்னியாகுமரியை அலறவிட்ட ஆந்திரா கொள்ளையன்... தன் ஸ்டைலில் கவனித்து விட்ட தமிழ்நாடு போலீஸ்
திருவட்டார் வியன்னூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மோகன்தாஸ் என்பவர் வீட்டிற்குள் கடந்த ஜூலை மாதம் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு, 75 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கொள்ளையர்களில் ஒருவர் விமானம் மூலம் ஆந்திரா சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த பிரபல கொள்ளையன் மனுகொண்டா அனில்குமார், பார்த்திபன் மற்றும் திருப்பூர் சுப்ரமணியம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 சவரன் நகைகளை மீட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் மூலம் அழைத்து வந்தனர். மார்த்தாண்டம் அருகே மனுகொண்டா அனில்குமார் தப்ப முயன்றபோது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பார்த்திபன் மற்றும் திருப்பூர் சுப்ரமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.