"சமுதாயத்தில் சத்தமில்லாமல் நடக்கும் சம்பவங்கள்" -ஐகோர்ட் நீதிபதி வேதனை
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிகழ்வுகள் சமுதாயத்தில் சத்தமில்லாமல் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அரசு, அதற்கான பட்டாவும் வழங்கியது. அந்த பட்டாவை ரத்து செய்யக் கோரி, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி, அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கிராம பஞ்சாயத்து தலைவர் மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் நேரில் ஆஜராகி, தான் தெரியாமல் செய்துவிட்டதாக நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்தார். அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிகழ்வுகள் சமுதாயத்தில் சத்தமில்லாமல் நிகழ்த்தப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.