கொடநாடு வழக்கு... 2017ல் மேலாளர் சொன்னது என்ன...?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜன், தனிப்படை குழுவின் முன்பாக புலன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சம்பவம் நடந்த 2017ஆம் ஆண்டு நடராஜன் அளித்துள்ள வாக்குமூலம் என்ன? இப்போது பார்க்கலாம்...
x
கொடநாடு எஸ்டேட்டில் மொத்தம் 14 கேட்கள் உள்ள நிலையில் 10வது கேட் வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர் எஸ்டேட்டின் உள்ளே இருந்த பங்களாவிற்குள் நுழைந்த அந்த கும்பல், அங்கிருந்த 5 வாட்சுகள் மற்றும் காண்டாமிருக பொம்மை ஒன்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.திருடி விட்டு செல்லும் போது, கூடலூர் சோதனை சாவடியில் சோதனை பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கினர். ஆனால், திருடர்கள் என தெரியாத நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த கும்பலில் இருந்தவர்களின் முகவரியை மட்டும் வாங்கி கொண்டு போலீசார் அனுப்பியுள்ளனர். இதன் பிறகு கொள்ளை, கொலை விவகாரம் பூதாகரமாகவே 27ஆம் தேதி கூடலூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். அப்போது கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பாலசுந்தரம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். 
பின்னர், 2020ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி, உதகை நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அளித்த விபரங்கள் 62 பக்க அறிக்கையாக உள்ளது... 
அதில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 2017ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் வாக்குமூலம் பெற்றதாக பாலசுந்தரம் தெரிவித்துள்ளார். அதன்படி, பங்களாவின் பிரதான வாசலுக்குரிய சாவி ஒன்று எப்போதும் தன்னிடம் இருக்கும் என மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.ஆனால் ஜெயலலிதாவின் அறைச் சாவியானது சென்னையில் தான் இருக்கும் என்றும், அவர் வருவதற்கு ஒரு நாள் முன்பாக சாவி அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜெயலலிதா வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக சென்னை போயஸ் கார்டன் பணியாளர்கள் வந்து பங்களாவை சுத்தம் செய்வார்கள் என்றும் நடராஜன் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடநாடு பங்களாவின் உள் அறை கதவுகளின் சாவி தன்னிடம் இல்லாதததால் திருட்டு போன பொருட்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் 2017ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நடராஜன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில், பங்களாவின் மாடியில் உள்ள 2 அறைகள் உடைக்கப்பட்டதாக சாட்சிகள் யாரும் கூறவில்லை என்றும்அதேநேரம் பொருட்கள் திருடு போனதாக எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.14 கேட்கள் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் சம்பவத்தன்று 3 கேட்களில் 2 காவலாளிகள் மட்டும் இருந்ததாவும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நாளன்று கொடநாடு பகுதியில் மின் இணைப்பு சீராக இருந்தது என்றும், பங்களாவில் இருந்த  பொருட்கள் குறித்து மகஜர் தயாரிக்கும் போது மேலாளர் நடராஜனும் உடன் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானதாக கூறப்படும் காண்டா மிருக சிலையானது மேல் தளத்தில் உள்ள ஜெயலலிதாவின் அறையில் தான் இருந்துள்ளது. காண்டா மிருக சிலை இருந்த ஷோ கேஸ்க்கு செல்ல வேண்டுமென்றால் கீழ் தளத்தில் உள்ள பிரதான ஹால், விருந்தினர்கள் அறை, அதன்பின் அலுலவக அறையை தாண்டியே மாடிப்படி ஏற வேண்டும். 
மாடிப்படி ஏறினால் வலது பக்கத்தில் ஜெயலலிதாவின் அறை, இடது பக்கத்தில் சசிகலாவின் அறை இருக்குமாம்...இந்த அறையின் கதவுகள் மற்றும் ஷோ கேஸ்கள் நல்ல நிலையில் இருக்கும் போது அதன் உள்ளே இருந்த 2 பொம்மைகளில் ஒரு காண்டாமிருக பொம்மை மட்டும் காணாமல் போயுள்ளது. காண்டாமிருக சிலை பிளாட்டினத்தால் ஆனது என காவல் ஆய்வாளர் ஒருவர் தவறுதலாக கூறி விட்டதாகவும், பின்னர் விசாரணை அதிகாரியான பாலசுந்தரம் நடத்திய விசாரணையின் போது அது பளிங்கு கல்லால் ஆனது என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் இதுவரை ஆஜராகாத நடராஜன் இப்போது அமைக்கப்பட்டிருக்கும் தனிப்படை முன்பாக ஆஜராகி உள்ளார். அவர் அளிக்கும் வாக்குமூலம் என்ன? இந்த வழக்கில் விசாரிக்கப்படாத மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தினால் கொடநாட்டில் நடந்தது என்ன? என்பது தெரியவரும்.... 


Next Story

மேலும் செய்திகள்