"மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் 15வது நிதி ஆணையத்தால் வழங்கப்படும் 4 ஆயிரத்து 280 கோடி ரூபாயை பயன்படுத்தி வட்டார, நகர்புற மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.மக்களை தேடி மருத்துவம் திட்டம் 258 கோடிரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கப்படும் என்றும்
266 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 583 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.25 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 97 கோடியே 49 லட்சம் செலவில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும் எனவும்
8 அரசு மருத்துவமனைகளில் 72 கோடி செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிய நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்றும் திண்டிவனம்,தாம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 6 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் 41 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.ஊரகப் பகுதிகளில் உள்ள 2ஆயிரத்து 400 துணை சுகாதார நிலையங்கள் 35 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் நலவாழ்வு மையங்கள் ஆக மேம்படுத்தப்படும் எனவும் மரபணு ரத்த நோய்களான தலசீமியா மற்றும் ஹீமோபிலியா சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் உபகரணங்கள் 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 34 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story