டாஸ்மாக் திறப்பு ஏன் ? - பேரவையில் காரசார விவாதம்
கொரோனா தொற்று பாதிப்பு உள்ள சூழலில் மதுக்கடைகளை திறந்தது ஏன் என்பது தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ள சூழலில் மதுக்கடைகளை
திறந்தது ஏன் என்பது தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.அதிமுக அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவி, கடந்த ஆட்சியில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தபோது மதுக்கடைகள் திறந்ததால், ஸ்டாலின் போராட்டம் நடத்தியதாகவும்,ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில மதுக்கடைகளை அரசு திறந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும் , கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும், கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மதுவிற்பனையை தடுக்கவே மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும்
அமைச்சர் விளக்கம் அளித்தார்.அப்போது பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி,
கடந்த ஜுன் மாதம் 7 ஆயிரம் என்ற அளவில்தான் பாதிப்பு
இருந்ததாகவும், இன்று பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த மே மாதம் 7 ம் தேதி 26 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை, இந்த அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது 7 ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அறிவிப்பு வெளியாகி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் முழுமையாக செயல்படமுடியவில்லை என்றார்.அப்போது தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி
கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் அறிவிப்பால் செயல்படமுடியவில்லை என்றால், அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டதும், மேலும் பேட்டியும் அளித்துள்ளார் என்றும் சுட்டிகாட்டி பேசினார். இவ்வாறு விவாதம் தொடர்ந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உங்கள் ஆட்சியில் நீங்கள் கட்டுப்படுத்தியதாகவும், எங்கள் ஆட்சியில் நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
Next Story