கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி மனு - 3 மாதத்தில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தந்தை பணியாற்றிய பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரும் பெண்ணின் விண்ணப்பம் குறித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில், பணியாற்றிய கஜேந்திரன் என்பவர் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகள் விஜயபிரசன்னா, கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் விண்ணப்பித்தார். அது நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஒரு உறுப்பினர் இறந்து விட்டால் அந்த குடும்பத்துக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தனர். கருணை அடிப்படையில் வேலை வழங்குவது, கோவிலுக்கு வரும் அனைவருக்கும் வழங்கப்படும் பிரசாதமோ, அறக்கொடையோ அல்ல எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தகுதியானவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்ததன் மூலம் ஊழியரின் குடும்பத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிட்டதாக அதிருப்தி தெரிவித்தனர். 3 மாதங்களில் மனுதாரர்க்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டனர்
Next Story