காவல் உயர் அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் - மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்
காவல்துறை அதிகாரிகள் பெயரில் பேஸ்புக்கில் மோசடி செய்ய முயன்ற கும்பல், இப்போது சென்னை காவல் ஆணையரின் பெயரிலும் போலி கணக்கை துவக்கி கைவரிசை காட்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரடங்கு காலத்தில் சைபர் க்ரைம் குற்றங்களுக்கு பஞ்சமே இல்லை என சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான குற்றங்களில் இப்போது காவல்துறை அதிகாரிகளையே பதம் பார்த்திருக்கிறது பலே மோசடி கும்பல்...
கடந்த சில நாட்களாக காவல் துணை ஆணையர்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்குகள் துவங்கப்பட்ட செய்திகள் வெளியாகின.
சென்னை மாநகர கூடுதல் ஆணையர் தினகரன், மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோசம், வண்ணாரப்பேட்டை சரக உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் உள்ளிட்டோரின் பெயர்களில் அடுத்தடுத்து போலியான பேஸ்புக் பக்கங்கள் துவங்கப்பட்டன. காவல் உடையில் உள்ள அவர்களின் புகைப்படங்களை பார்த்த பலரும் அவர்களின் பக்கத்தை பாலோ செய்ய துவங்கினர்.
அந்த கணக்கில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் கும்பல், அவசர தேவை என கூறி பணம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிலர் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது தான் அது மோசடி கும்பல் என தெரியவந்தது.
அடுத்தடுத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் பெயரில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
ஏடிஜிபி அந்தஸ்தில் இருக்கக் கூடிய டேவிட்சன் ஆசீர்வாதம், ஏடிஜிபி ரவி ஐஜி சுனில் குமார் உள்ளிட்டோரின் பெயர்களிலும் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டதால் பரபரப்பும் அதிகமானது....
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் இதில் ஈடுபட்டதும் உறுதியானது. செல்போனை கொண்டு போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கியதும் தெரியவந்த நிலையில் போலி கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த சூழலில் தான் சென்னை காவல்துறை ஆணையரான மகேஷ்குமார் அகர்வாலிடமே தன் வேலையை காட்டியிருக்கிறது அந்த மோசடி கும்பல். தமிழகம் முழுவதும் மக்களுக்கு பரீட்சயமான அவரின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கியது அந்த கும்பல்.
அச்சு அசலாக அவரின் பேஸ்புக் பக்கம் போலவே, துல்லியமான தகவல்களையும், போட்டோக்களையும் பதிவேற்றி இருக்கிறது அந்த கும்பல். இது உண்மையான பேஸ்புக் அக்கவுண்ட் தான் என நம்பிய பலரும் நட்பு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவசர தேவை என கூறி 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்டு ஒரு போஸ்ட் பதிவேற்றப்பட்டது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் இதனை காவல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே, நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்தனர் போலீசார்...
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார் அகர்வால், அந்த போலி பக்கத்தை முடக்குமாறு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த கணக்கு முடக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் வடமாநில கும்பல் ஒன்று இயங்கி வருவதாக உறுதியான நிலையில் சைபர் க்ரைம் போலீசார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story