நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி- தேர்வு நெருங்கி வரும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சோகம்

கோவையில் நீட் தேர்வு தொடர்பான அச்சமும், மனவிரக்தியும் அதிகரித்ததில் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி- தேர்வு நெருங்கி வரும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சோகம்
x
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஐடிஐயில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நாமக்கல்லில் உள்ள பள்ளியில் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்த இவரது மகள் சுபஸ்ரீ. கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டே நீட் தேர்வு எழுதிய சுபஸ்ரீ 451 மதிப்பெண்கள் பெற்று பல் மருத்துவ படிப்பில் சேர இடமும் கிடைத்துள்ளது.  ஆனால் மருத்துவராகி சேவை செய்வதே தன் நோக்கம் என இருந்துள்ளார் சுபஸ்ரீ. அதற்காக தன்னை தயார் படுத்தியும் வந்துள்ளார். கோவையில் உள்ள தனியார் அகாடமியில் அதற்கான பயிற்சியிலும் தீவிரம் காட்டி வந்தார்.  இதனிடையே கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தேர்வு நெருங்கவே கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.  எப்படியும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த சுபஸ்ரீக்கு தேர்வு தொடர்பான அச்சம், மன அழுத்தமாக மாறவே, கடைசியில் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  ஆசையாக வளர்த்த மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து பதறிப்போன பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவியின் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அனிதாவை போல பல தளிர்கள் தங்கள் கனவை தொலைத்துவிட்டு காற்றில் கலப்பது சோகத்தின் உச்சமே.

Next Story

மேலும் செய்திகள்