அண்ணா பல்கலை.க்கு சீர்மிகு அந்தஸ்து வழங்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு மத்திய அரசு இறுதிக்கெடு
வரும் 31-ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற சிறப்பு அந்தஸ்து வழங்க எடுத்த முடிவின் மீது தமிழக அரசு தமது முடிவை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டில் உள்ள 5 பல்கலைக் கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் முடிவு குறித்து ஆராய தமிழக அரசு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்தது. ஆனால், சிறப்பு அந்தஸ்தை ஏற்பது குறித்து தமிழக அரசு இறுதி முடிவெடுக்கவில்லை. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை பின்பற்ற அனுமதிக்கப்படுமா என்பதில் மத்திய அரசு உறுதியான பதிலை தமிழக அரசுக்கு தெரிவிக்கவில்லை என்கிற காரணம் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பது குறித்த தனது முடிவினை வரும் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த சிறப்பு அந்தஸ்தினை தமிழக அரசு ஏற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சிறப்பு அந்தஸ்து நாட்டில் உள்ள வேறொரு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுமென தெரிய வந்துள்ளது.
Next Story