சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட குழப்பமான அறிக்கை - உண்மை நிலவரம் என்ன ?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சட்டப்பேரவையில் கல்வித்துறை அளித்த தகவலால் குழப்பம் நீடித்து வருகிறது
x
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி கல்வித்துறை ஆவண புத்தகத்தில், அதிர்ச்சியளிக்க கூடிய புள்ளி விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில், பல்வேறு புள்ளி விபரங்கள் அடங்கிய ஆவண புத்தகம் வெளியிடப்படுகிறது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள், கடும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளன. 

கடந்த ஆண்டை விட, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து15 ஆயிரம் குறைந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும், 11 ம் வகுப்பில் 8 லட்சம் பேர், 12 ம் வகுப்பில் 8 லட்சம் பேர் என, இரு வகுப்புகளிலும் சேர்த்து 16 லட்சம் முதல் 17 லட்சம் பேர் வரை தான் படிக்கின்றனர். பொதுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களின் விபரங்களை தரக்கூடிய தேர்வுத்துறையின் புள்ளி விபரத்தில் இருந்து இதனை உறுதி செய்ய முடியும். 

ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில், கடந்த 2018-19 ம் ஆண்டில் 11, 12 ஆம் வகுப்புகளில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், 67 லட்சத்து 38 ஆயிரத்து 327 மாணவர்கள் படித்தனர் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் 2019-20ஆம் ஆண்டு புத்தகத்தில், அதாவது கடந்த 2 ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்த புத்தகத்தில், 19 லட்சத்து 60 ஆயிரத்து 896 மாணவர்கள் படித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒரே ஆண்டில், 47 லட்சத்து, 77 ஆயிரத்து, 431 மாணவர்கள் குறைந்துவிட்டார்களா அல்லது படிப்பை நிறுத்திவிட்டார்களா என்ற அதிர்ச்சி கேள்வியும் நம் முன் எழுகிறது. 

மேலும், இத்தனை லட்சம் மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிப்பதற்கு வாய்ப்புகளே இல்லை எனும்போது, பேரவையில் தாக்கல் செய்த புள்ளி விபரங்கள் உண்மைத்தன்மை வாய்ந்ததா? இல்லை தவறாக வழங்கப்பட்டதா? என கல்வித்துறை அதிகாரிகள் விளக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்