ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பான உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா? என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என நீதிபதிகள் குறை கூறினர். இதுசம்பந்தமாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இணை ஆணையர் சுதாகர், துணை ஆணையர் ஸ்ரீஅபினவ் ஆகியோர் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் நேரில் ஆஜராகியிருந்தனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் பயணித்தது தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 4 லட்சத்துக்கும் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகவும், அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பான சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், டில்லி மற்றும் பெங்களூருவில் அமல்படுத்தும் போது ஏன் தமிழகத்தில் அமல்படுத்த முடியாது எனக் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வாகனத்தை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். ஆனால் இதுவரை 2 லட்சம் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மோட்டார் வாகன சட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரும் ஹெல்மெட் அணிவதில்லை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நீதிபதிகள் கேட்டதற்கு,
ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் இடை நீக்கம் செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவு, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை புதன்கிழமை தள்ளிவைத்தனர்.
Next Story