சேலத்தில் நூற்றுக்கணக்கான மயில்கள் கிராமங்களில் முகாம் - பாதுகாக்க வலியுறுத்தல்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி கிராமங்களில் மயில்களின் வருகை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகள் வறட்சியான கிராமங்களை கொண்ட பகுதிகளாகும். இந்நிலையில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டததை அடுத்து செல்லபிள்ளைகுட்டை, முத்துநாயகன்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் வந்ததால், சுற்றுப்புற கிராமங்கள் பசுமையாக மாறியுள்ளது.
இந்நிலையில் இப்பகுதிகளுக்கு மயில்களின் வரத்து அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மயில்கள் வந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான மயில்கள் இப்பகுதிகளில் வலம் வருகின்றன.
மயில்களின் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளதால் குட்டி மயில்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள், மயில்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story