ஓய்வு அறிவித்தார் டேல் ஸ்டெயின் - வேகப்பந்துவீச்சில் கோலோச்சியவர்
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் அறிவித்துள்ளார். அவரது சாதனை பயணம் பற்றி சிறப்பு தொகுப்பு..
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் அறிவித்துள்ளார். அவரது சாதனை பயணம் பற்றி சிறப்பு தொகுப்பு..
ஓட்டத்திலேயே பேட்ஸ்மேன்களை மிரளவைப்பார்...
பவுலிங் ஸ்டைலில் எதிரணி ரசிகர்களையும் கவர்ந்திழுப்பார்...
இப்படி தனித்துவமிக்க திறமையால் கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின்..பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் திறன்... துல்லியமான யார்க்கர்... பேட்ஸ்மேனை வீழ்த்திய பின் நரம்பு புடைக்க ஆக்ரோஷமாக கொண்டாடும் ஸ்டைல்.. இவை எல்லாம் ஸ்டெயினை சிலாகிக்க வைக்கும் அம்சங்கள்...2004ல் அறிமுகமானது முதலே கவனத்தை ஈர்த்தவர், 2008 தொடக்கத்தில் இருந்து கிரிக்கெட் உலகில் ராக் ஸ்டாராக அவதரித்தார்.2008ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 100வது விக்கெட்டை சாய்த்த ஸ்டெயின், அந்த ஆண்டே சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்றார்.. மொத்தம் 93 டெஸ்ட்டில் விளையாடியுள்ள ஸ்டெயின் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து 2343 நாட்கள் முதலிடத்தில் இருந்தது அவரது திறமைக்கான அங்கீகாரம்...
வெற்றி, தோல்வி என பலவற்றை கண்ட ஸ்டெயினுக்கு, 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி மறக்க முடியாதது. மிக முக்கியமான கடைசி ஓவரை வீசிய ஸ்டெயின், சிக்சர் விட்டுக்கொடுக்க, தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பை கனவு எட்டாக்கனியானது.. அந்த தருணத்தில் மைதானத்தில் மண்டியிட்டு ஸ்டெயின் கலங்கிய காட்சிகள் ரசிகர்களால் என்று மறக்க முடியாதவை...டெஸ்ட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களின் ஒருவராக வலம் வந்த ஸ்டெயின், 2019ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விடைப்பெற்று ஒருநாள் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார்..
ஆனால் தொடர்ந்து காயத்தால் அவதியுற்று வந்தவர், ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக செவ்வாயன்று அறிவித்தார்.
இனி எத்தனை வேகப்பந்துவீச்சாளர்கள் வரலாம், போகலாம்... ஆனால் ஸ்டெயின் என்ற ஜாம்பவான் காலம் கடந்து நிலைத்து நிற்பார்...
Next Story