அன்று ஸ்டாலின் `நின்ற' இடமா..? அமைச்சர் பொன்முடி ஸ்பாட்டா..? தவெகவின் ப்ளான் என்ன ?

x

கட்சிக்கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது மாநாட்டிற்கு அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் ப்ளான் என்ன ? என்ன நடக்கிறது பனையூரில் என்பதை பார்க்கலாம் விரிவாக...

The Goat படத்தின் டிரெய்லர் ஒரு பக்கம் சினிமா ரசிகர்களை கவர, மறுபக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக தன் கட்சி நிர்வாகிகளை பரபரப்பில் வைத்திருக்கிறார் விஜய்...

கட்சியை மாஸாக ஆரம்பித்து அதிரடி காட்டிய விஜய், இப்போது தன் கட்சிக்கென கொடியை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறார்.. இதற்கான ஒத்திகையும் பவுர்ணமி தினத்தன்று அரங்கேறிய சூழலில் வரும் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கொடி அறிமுக நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி தவெக நிர்வாகிகளை குஷிப்படுத்தி இருக்கிறது...

அதுவும் பனையூரில் தான் நடக்கிறதாம் இந்த நிகழ்வு... இதுவரை விழாவிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் விழாவிற்கு எத்தனை பேர் அனுமதி? பாஸ் வழங்கப்படுமா? என ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் நிர்வாகிகள்..

இப்படி கட்சி பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், மற்றொரு புறம் கட்சியின் முதல் மாநாட்டிற்காக விறுவிறுவென ஆயத்தமாகி வருகிறார் விஜய்.. இதற்காக தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர்களிடையே போட்டி நிலவி வருகிறதாம்...

அதன் படி கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களும் முதல் மாநாட்டை சொந்த மாவட்டத்தில் நடத்தினால் பெயர் கிடைக்கும் என்ற நோக்கில், ஒவ்வொருவரும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வந்தனர்.

இதில் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் மாநாடு நடத்த ஒரே இடத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் இல்லாததால் அருகில் இருக்கக்கூடிய விக்கிரவாண்டி பகுதியில் இடத்தை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டினர் அக்கட்சியினர்.

இதற்காக 3 இடங்களை தேர்வு செய்து ஒப்புதலுக்காக தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இருக்கக்கூடிய ஒரு இடம், அமைச்சர் பொன்முடி கல்லூரிக்கு அருகே உள்ள விவசாய நிலம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இடம் என மூன்று இடங்கள் தேர்வு பட்டியலில் இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் தயாராக இருப்பதாகவும் அதே போல் சேலத்திலும் போதிய இடவசதியுடன் கூடிய இடம் தயாராக இருப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் குஷி மோகன் தெரிவித்துள்ளார்..

இதில் தலைமை எந்த இடத்தை கை காட்டுகிறதோ அங்கு தான் மாநாடு என்றும் விக்கிரவாண்டியில் தான் நடத்த வேண்டும் என எந்தவித நிர்பந்தமும் இல்லை என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மாநாட்டில் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கேற்ப பிரமாண்ட வசதிகளை செய்யும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடங்களையே பரிந்துரை செய்வதாக கூறுகின்றனர் மாவட்ட பொறுப்பாளர்கள்..

இன்னும் ஓரிரு வாரங்களில் மாநாடுக்கான இடம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட, பரபரக்கிறது பனையூர்..


Next Story

மேலும் செய்திகள்