வீட்டுக்கே வந்த `அன்புத் தம்பி' அண்ணாமலை.. .உருகிய `அக்கா தமிழிசை... சமாதானமும்.. பின்னணியும்
அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை தொடர்ந்து அளிப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான நிலையில், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை, அவரது இல்லத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்து பேசினார்.
பின்னர், அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் தாமரை மலரும் என உறுதியுடன் தொடர்ந்து கூறிவரும், அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவம் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகம் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, தமிழக பாஜக மாநிலத்தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலையை சந்தித்ததில் மகிழ்ச்சி என தமிழிசை செளந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், அண்ணாமலை மற்றும் தமிழிசை செளந்தரராஜன் ஆதரவாளர்கள் இடையே சமூகவலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், தமிழிசையை மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்ததாகவும், அதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவின.
எக்ஸ் தளத்தில் இதற்கு விளக்கம் அளித்த தமிழிசை செளந்தரராஜன், தேர்தலுக்கு பிந்தைய பணிகளை கவனிக்கமாறு அமித்ஷா அறிவுரை கூறியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழிசை செளந்தரராஜனை, அண்ணாமலை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.