விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் -தர்ணாவில் ஈடுபட்ட சிபிஎம்,விசிகவினர்- புதுவையில் பரபரப்பு
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி மற்றும் 72 வயது முதாட்டி உட்பட மூவர் வீட்டு கழிவறையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், அருகேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கோளாறால்... பாதாள சாக்கடை வழியாக விஷ வாயுக்கள் கசிந்து அப்பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் வெளியேறியதாக கூறப்பட்டது. தொடர்ந்து இதன் பின்னணி குறித்து துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த 15 வயது சிறுமிக்கு 30 லட்ச ரூபாயும், மற்ற இரு பெண்களுக்கும் தலா 20 லட்ச ரூபாயும் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெட்டியார்பாளையத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒரு கட்டத்தில் இரு கட்சியினரையும் போலீசார் வலுக்கட்டயமாக கைது செய்து அப்புறப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.