மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த கணவன்...அதிர வைக்கும் சம்பவம்
திருப்பதியில் விவாகரத்து தராததால் மனைவியைக் கொன்ற கணவர் உடலை சூட்கேசில் அடைத்து ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கோரலகுண்டா பகுதியைச் சேர்ந்த பத்மாவுக்கும், சத்திய நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் வேணுகோபாலுக்கும் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் வேணுகோபால் பத்மாவை அடித்து நிர்வாணமாக்கி கொடுமைப் படுத்தி வந்ததால், பொறுத்துக்கொள்ள இயலாத பத்மா கடந்த ஆண்டு தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து விவாகரத்துக் கோரி வேணுகோபால் வழக்கு தொடர்ந்த நிலையில், ஜனவரி மாதம் 4ம் தேதி பத்மாவை வேணுகோபால் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதை உண்மை என நம்பி பத்மா மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்ற நிலையில் வீட்டில் வைத்து பத்மாவிடம் விவாகரத்து தரக்கோரி வேணுகோபால் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் பத்மா மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த வேணுகோபால் தனது தாய் தந்தை மற்றும் நண்பர் சந்தோஷுடன் இணைந்து பத்மாவை அடித்துக் கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வெங்கடாபுரம் ஏரியில் வீசியுள்ளார். 5 மாதங்களாக பத்மா நலமுடன் இருப்பதைப் போல் அவரது பெற்றோரை நம்ப வைத்த வேணுகோபால், கடந்த 18ம் தேதி விவாகரத்து வழக்கில் தனியாக ஆஜரானார். இதனால் சந்தேகம் அடைந்த பத்மாவின் தாயார் போலீசில் புகார் அளிக்கவே வேணுகோபால் மனைவியை அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசியது அம்பலமானது. இதையடுத்து பத்மாவின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வேணுகோபால், அவருடைய தந்தை மற்றும் தாய் ஆகியோரைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நண்பர் சந்தோஷ்-ஐத் தீவிரமாக தேடி வருகின்றனர்.