ஆட்டிப்படைக்கும் கோர்ட், கேஸ்.. படாத பாடு படும் மோகன்லால்..
வீட்டில் யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லால் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், வரும் நவம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் நடிகர் மோகன்லாலின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2012-ஆம் ஆண்டு சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நான்கு யானை தந்தங்களை கைப்பற்றினர். பின்னர் அந்த தந்தங்கள், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தங்களை வீட்டில் வைத்திருக்க வனத்துறையின் சிறப்பு அனுமதி பெறாததால், இதுதொடர்பாக மோகன்லால் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, யானை வளர்ப்பவர்களிடம் இருந்து தந்தங்களை விலைக்கு வாங்கி வந்ததாக மோகன்லால் தெரிவித்தார். இதனிடையே, மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய கேரள அரசு முன்வந்தபோதும், அதற்கு சிலர் நீதிமன்றம் மூலம் தடை பெற்றதால், அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக மோகன்லால் உள்ளிட்டோர், வரும் நவம்பர் 3-ஆம் தேதி ஆஜராகுமாறு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.