மணிப்பூர் டூ மும்பை `நீதி நெடும் பயணம்'... 15 மாநிலங்கள்; 7000 கிமீ... ராகுல் காந்தி அடுத்த அதிரடி
பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது கட்டமாக, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் உள்ள பேலஸ் மைதானத்தில் பொதுக்கூட்டத்துடன் யாத்திரை தொடங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், இம்பாலில் உள்ள கொங்ஜாம் எனும் பகுதிக்கு, இன்று செல்லும் ராகுல் காந்தி, அங்குள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து தெளபால் புறப்பட்டு, யாத்திரையை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை, 67 நாட்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 6 ஆயிரத்து 713 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து மும்பையில் வரும் மார்ச் 20ம் தேதி நிறைவடைகிறது.