"ஜனநாயகத்திற்கு ஆபத்து".. `கருப்பு அறிக்கை' பாஜகவை பிரித்தெடுத்த கார்கே
நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகால பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசின் 10 ஆண்டுகால பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கைக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில், 10 ஆண்டு கால மோடி அரசின் தவறான நிர்வாகம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கையை வெளியிட்டார். பத்தாண்டு காலம் அநியாய காலம் என்று தலைப்பிடப்பட்டுள்ள 54 பக்கங்கள் கொண்ட கருப்பு அறிக்கையில், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏராளமான அநீதிகளை பா.ஜ.க. அரசு இழைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி தங்களது சாதனைகளை மட்டுமே முன்வைத்து, தோல்விகளை மறைப்பதாக கார்கே குற்றம் சாட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்.எல்.ஏக்களை பா.ஜ.க விலைக்கு வாங்கி இருப்பதாகவும், பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசை கவிழ்த்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். நாட்டின் முக்கிய பிரச்சினையான வேலையில்லா திண்டாட்டம் குறித்து பா.ஜ.க ஒருபோதும் பேசுவதில்லை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.