சென்னைக்கும் பெங்களூரு நிலைமையா? - நிலத்தடி நீர்.. அடித்தது அபாய சங்கு
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 5 அடி அளவு குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் 5 அடி வரை குறைந்துள்ளது.
சென்னை விரிவாக்க பகுதிகளில் குடிநீர் பணிகள் நடந்து வருவதால் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மாநகரப் பகுதிகளில் 18.08 கோடி லிட்டரும், விரிவாக்கப் பகுதிகளில் 11.79 கோடி லிட்டரும் லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2021 - 2022ஆம் ஆண்டுகளில் மழைப்பொழிவு குறைந்தாலும் அதனை ஈடுகட்டும் வகையில் 2023 ஆம் ஆண்டு சற்று ஆறுதலாக மழை பெய்தது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 78 சென்டிமீட்டர் வரை பெய்தது... அதேபோல வடகிழக்கு பருவமழையும் 109 சென்டிமீட்டர் பெய்தது...
சென்னை மாநகரின் நிலத்தடி நீர்மட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரைமட்டத்திலிருந்து 4.48 மீட்டரில் கிடைத்த நீர்மட்டம் நடப்பாண்டில் 4.22 அடியாக உள்ளது...
அதேபோல கடந்த ஜனவரியில் 3.4 மீட்டரில் இருந்த நீர்மட்டம் பிப்ரவரி மாதம் 4.22 அடியாகக் காணப்பட்டது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 5 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது. இவ்வாறு நீர்மட்டம் குறைவதற்கு மழை நீர் சேமிப்பு வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாதது தான் காரணம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...
மழைநீர் வடிகால் அமைப்புகளை முறையாக சீரமைக்க உரிய நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுத்து, அதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு தருவதே நீர்மட்டம் உயர்வுக்கு ஒரே வழி என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது...