#BREAKING || எங்களிடம் தண்ணீர் இல்லை..மறுஆய்வு செய்யுங்கள்...கர்நாடகா அரசு மனு
தமிழகத்திற்கு நாள்தோறும் வினாடிக்கு 5000 கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மனு....
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23-ஆவது கூட்டம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்ட பிறகும், கடந்த 15 நாள்களாக காவிரி பாசன பகுதிகளில் அதிகரித்து நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டும், வட கிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு அணைகளுக்கு நீர்வரத்து எதிர்பார்க்கப்படுவதாலும், காவிரி பாசன பகுதிகளிலுள்ள நகரங்களின் குடிநீர் தேவையை ஈடுசெய்ய தேவையான நீரை சேமிப்பதன் அவசியம் கருதியும், கர்நாடகத்தின் குறைந்துள்ள நீர்பாசனத்தை கருத்தில் கொண்டும், ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த 15 நாள்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திற்கு நாள்தோறும் வினாடிக்கு 5000 கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் கர்நாடக அரசின் சார்பில் இந்த மறு ஆய்வு மனு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.