அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் - 2023-ல் ராமர் கோயிலை திறக்க முடிவு
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை 2023 ஆம் ஆண்டில் பக்தர்களுக்காக திறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலவரம் பற்றி பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான நீண்ட கால வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அயோத்தியில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டுவதற்கான கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி பூமி பூஜை நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமானத்துக்காக நாடுமுழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே 3 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலானது.
இந்த நிலையில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை முடித்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கோவில் வளாகத்தின் முழுமையான கட்டுமானப் பணிகள் 2025 இறுதியில்தான் முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 3 தளங்கள், 5 குவி மாடங்கள், கோபுரங்கள், 360 தூண்கள் என மிக பிரமாண்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவிலுக்கான அஸ்திவாரப்பணிகள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது.
இதேபோல, ராமர் கோவில் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, பயணிகள் வசதிக்காக அயோத்தியில் அதி நவீன விமான நிலையம் திறக்கப்படும் என்றும், இதற்காக 224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Next Story