பிரபலமாகும் கற்கோயில் சிவபெருமான் - 38 ஆண்டுகள் செலவிட்டு, கோயில் எழுப்பிய தனி மனிதர்
தமது 38 ஆண்டு காலத்தைச் செலவிட்டு, தனியொரு மனிதர் கட்டியுள்ள கல் சிவன் கோயில், பார்வையாளர்களை பரவசமடைய வைத்துள்ளது.
இமாச்சல பிரதேசம், solan மாவட்டத்தில் உள்ள chail மலைப்பகுதியில் உள்ளது, இந்த சிவன் கற்கோயில். இங்கு சொல்லிக் கொள்ளும்படியாக, பக்தர்கள் பெருமளவில் வருவதில்லை... ஆனால், வந்தவர்கள், அதிசயித்துப் போய் விடுகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் Chail மலைப் பிரதேசம், சிம்லாவில் இருந்து 44 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதி, கற்கோயிலால், மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
இந்த கோயில், இரு கரங்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் சத்ய பூஷண், அவருக்கு வயது 64. இவர், தனி ஒருவராக, கடந்த 1980ம் ஆண்டு தொடங்கி, 38 ஆண்டுகளாக உழைத்து, இந்த கட்டுமானத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கோயில், ''தமது கனவு'' என்கிறார் சத்ய பூஷண்...
திரும்பிய பக்கமெல்லாம், ஆச்சரியப்பட வைக்கும் வேலைப்பாடுகள், நிறைந்து காணப்படுகிறது. ஆனால், அனைத்தும் கற்கள் தான்... வெறும் கற்களும், இவரது கைகளும் தான், இந்த சிவன் கோயிலை, கலை நயமிக்கதாக மாற்றியுள்ளது.
முறுக்கப்பட்ட உலோக கம்பிகளோடு, கற்கள் தான், முற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கற்களுக்கு இடையே, சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு பூச்சு என்று, எதையும் காண முடியாது.
வண்ணப் பூச்சுகளும் இன்றி, இந்த கோயில் காணப்படுகிறது. ஆனால், கற்களில் உள்ள இயற்கையான வண்ணம், வேலைப்பாடுகள் காண்போரைக் கவர்ந்து விடுகிறது. கோயிலைச் சுற்றிலும் மலர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இவை, உண்மையான மலர்கள் அல்ல. அவையும் கற்கள் தான்...
சிவபெருமானைச் சுற்றியுள்ள பாம்பும், கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மலர்களைச் சுற்றி வைத்தது, போல் காணப்படுகிறது.
தமது பள்ளி நாட்களில் சிற்ப, மர வேலைப்பாடுகளின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டது, இந்த கோயிலைக் கட்ட சத்ய பூஷணுக்கு உதவியுள்ளது. இவரது இந்த பணிக்கு, உள்ளூர் மக்கள் உதவியுள்ளனர். அவர்களது உதவியோடு, சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் இந்த கோயில் உருவாகியுள்ளது.
இந்தக் கோயிலுக்கு அருகிலேயே தமது குடியிருப்பை அமைத்துக் கொண்ட சத்ய பூஷண், இந்த கட்டுமானத்திற்காக தினமும் 4 மணி நேரம் செலவிட்டுள்ளார்.
இந்த கட்டுமானத்திற்காக, தமது வாழ்நாளில் 38 ஆண்டுகளைச் செலவழித்துள்ள இவர், சிவனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் எழும் மகிழ்ச்சியைக் கண்டு உற்சாகம் கொள்கிறார்.
கோயில் குறித்தும், தமது பணி குறித்தும், சமூக வலை தளங்களில் வரும் பதிவுகளைக் கண்டு, பெரிதும் மகிழ்ந்துள்ளார். இந்த பணிக்காக, அரசிடம் அவர் எந்த உதவியும் கோரவில்லை. மாறாக, கோயிலை மேலும் மெருகேற்றுவதிலேயே முழு கவனமும் கொண்டிருக்கிறார்.
Next Story